ரூபாயின் மதிப்பில் தொடருது சரிவு - ரூ.68.07

கடந்தவாரம் சற்று ஏற்றம் கண்ட இந்திய ரூபாயின் மதிப்பு இந்தவாரம் தொடர் சரிவில் இருக்கிறது. வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(செப்.,4ம் தேதி, புதன்கிழமை) வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 காசுகள் சரிந்து ரூ.68.55-ஆகவும் தொடர்ந்து 10.00 மணியளவில் ரூ.68.07-ஆகவும் சரிந்துள்ளது. முன்னதாக நேற்று வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.67.63-ஆக இருந்தது. 

நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வருவதாலும், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருவதாலும் இதனால் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கானநோயாளிகள் பயன்பெறுவர்: 350 முக்கிய மருந்துகளின் விலை குறைகிறது

மத்திய அரசின் மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவால், வரும் வாரங்களில், 350 முக்கிய மருந்துகளின் விலை கணிசமாக குறைய உள்ளது. இதனால், லட்சக்கணக்கானநோயாளிகளின், மருந்து செலவு வெகுவாக குறையும்.
ஒரே வகையான அடிப்படை மருந்தை பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள், வெவ்வேறு பெயர்களில் மருந்துகளை தயாரித்து சந்தைப்படுத்துகின்றன. இந்த மருந்துகளின் விலையை, நிறுவனங்கள், அவற்றின் விருப்பத்திற்கேற்ப நிர்ணயிக்கின்றன.

பரிந்துரை:ஒரேநோய்க்கு, பல்வேறு "பிராண்டு' பெயர்களில், வெவ்வேறு விலைகளில் மருந்துகள் விற்கப்படுகின்றன.சில மருத்துவர்கள், தங்களை "கவனிக்கும்' நிறுவனங்களின் மருந்துகளையே,நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். விலை அதிகம் என்றாலும், அவற்றை வாங்கவேண்டிய நிலைக்குநோயாளிகள் தள்ளப்படுகின்றனர்.
அதே மருந்தை, மற்றொரு நிறுவனம்,வேறு பெயரில் குறைந்த விலையில், விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வு, நோயாளிகளிடம் இல்லாத நிலை உள்ளது.இதுபோன்ற குளறுபடிக்கெல்லாம் முடிவு கட்டும் பொருட்டு, மத்திய அரசு, மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 350 முக்கிய மருந்துகளின் விலை, குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை இறுதி முதல், இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், சந்தையில் ஏற்கனவே உள்ள மருந்துகளை திரும்ப பெற்று, குறைக்கப்பட்ட புதிய விலையுடன், மீண்டும் சந்தைப்படுத்த, மருந்து நிறுவனங்களுக்கு, 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.இரு வாரங்களில் இந்த "கெடு' முடிவடைய உள்ள நிலையில், பல மருந்து நிறுவனங்கள், புதிய விலையில் மருந்துகளைசந்தைப்படுத்த துவங்கி விட்டன.
உத்தரவு:அதே சமயம், இந்த புதிய உத்தரவிற்கு, சில முன்னணி மருந்து நிறுவனங்களும், நாடு முழுவதும் உள்ள 7.5 லட்சம் மருந்து விற்பனையாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.சிப்லா,சன்பார்மா நிறுவனங்கள், புதிய உத்தரவை அமல்படுத்த, டில்லி உயர்நீதிமன்றத்தில், இடைக் கால தடை பெற்றுள்ளன.
அதே சமயம், இந்த புதிய உத்தரவால், மருந்து நிறுவனங்கள், தங்களின் லாப வரம்பை குறைத்து விட்டதாக, இந்திய மருந்து விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.ஓ.டீ.,) குற்றம் சாட்டியுள்ளது.மருந்து நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களுக்கு, 10ல் இருந்து, 7.5 சதவீதமாகவும், சில்லரை விற்பனையாளர்களுக்கு, 20ல் இருந்து, 13.75 சதவீதமாகவும், லாப வரம்பை குறைத்து விட்டதாக கூறப்படுகிறது.
லாப வரம்பு:300 சதவீதம் லாப வரம்பை பெறும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், குறைந்த பட்சம், 6 சதவீதமாவது, தங்களுக்கு வழங்கவேண்டும் என, மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, இன்று மும்பையில், ஏ.ஐ.சி.ஓ.டீ.,-ன் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

முக்கிய துறைகளின் உற்பத்தி 3.1 சதவீதம் வளர்ச்சி

கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 4.5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
கச்சா எண்ணெய்:கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் உற்பத்தி மிகவும் பின்னடைவை கண்டதையடுத்து, ஒட்டு மொத்த முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்துபோயுள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில், முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது.சென்ற ஜூலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி, மைனஸ் 2.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில், மைனஸ் 0.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
இதேபோன்று இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 13.05 சதவீதத்திலிருந்து, மைனஸ் 16.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்து உள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த தொழில்துறை உற்பத்தியில்,மேற்கண்ட எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2 சதவீதம் என்ற அளவில் இருந்து, 1.2 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதேசமயம், உர துறையின் உற்பத்தி, மைனஸ் 2.2 சதவீதம் என்ற அளவில்இருந்து, 0.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதம் என்ற அளவில் இருந்து, 0.8 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 26 சதவீதம் என்ற அளவிலிருந்து,5.1 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து உள்ளது.அதேசமயம்,உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி,1.1 சதவீதம் என்ற அளவிலிருந்து, 7 சதவீதம் என்ற அளவிலும், மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.7 சதவீதம் என்ற அளவிலிருந்து, 5.2 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளன.
புள்ளிவிவரம்:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 6.3 சதவீதம் என்ற அளவிலிருந்து, 1.9 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.கடந்த 2012-13ம் நிதியாண்டில்,மேற்கண்ட முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, அரசின் புள்ளிவிவரத்தில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நூலிழை விலை கிலோவுக்கு ரூ.16 உயர்வு:பின்னலாடை தொழில் துறையினர் அதிர்ச்சி

:பஞ்சு விலை உயர்வு, மீண்டும் தலை தூக்கும் மின்வெட்டு, டீசல் விலை அதிகரிப்புபோன்றவற்றால், திருப்பூர் பகுதியைசேர்ந்த நூற்பாலைகள், நூலிழை விலையை கிலோவுக்கு, 16 ரூபாய் உயர்த்தியுள்ளன.
தமிழக நூற்பாலைகள், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து பருத்தியை கொள்முதல் செய்து, நூலிழையை உற்பத்தி செய்கின்றன.ஆண்டுதோறும், பருத்தி அறுவடை நடைபெறும், அக்., முதல் ஏப்., வரையிலான காலம், பருத்தி பருவமாக கணக்கிடப்படுகிறது. கடந்த 2012-13ம் ஆண்டு, பருத்தி பருவம் துவங்கியது முதல், ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. இதனால், சீசன் துவக்கம் முதலே, உள்நாட்டில் பருத்தி விலை அதிகரிக்கத் துவங்கியது.

மின்வெட்டு:மின்வெட்டு நேரமும் அதிகரித்ததால், நெருக்கடிக்கு உள்ளான நூற்பாலைகள், கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை, மாதந்தோறும் கிலோவுக்கு, ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் வீதம், படிப்படியாக நூலிழை விலையை உயர்த்தி வந்தன.கடந்த ஏப்ரலுடன் சீசன் நிறைவடைந்து, வெளிமாநில பருத்தி வரத்து தடைபட்டுள்ளது. இதனால், கடந்த ஜூலை முதல் பருத்தி விலை, அசுர வேகத்தில் உயர்ந்து, தற்போது ஒரு கேண்டி, 52 ஆயிரம் ரூபாயாக உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டும் தலைதூக்கியுள்ளது; டீசலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், நூலிழை உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதாக கூறி, திருப்பூர் நூற்பாலைகள், நூலிழை விலையை கிலோவுக்கு, 16 ரூபாய் உயர்த்தியுள்ளன.கார்டடு (ஜி.எல்., ரகம்): 196.90 ரூபாயாக இருந்த, 16ம் நம்பர் நூலிழை, 212.77 ரூபாய்; 199.01 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 241.89; 207.48 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 223.36; 220.18 ரூபாயாக இருந்த 30ம் நம்பர், 236.06; 233.94 ரூபாயாக இருந்த 34ம் நம்பர், 249.82; 241.35 ரூபாயாக இருந்த 40ம் நம்பர், 257.22 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கோம்டு (வி.எல்., ரகம்): 205.36 ரூபாயாக இருந்த 10ம் நம்பர், 221.24 ரூபாய்; 209.60 ரூபாயாக இருந்த 16ம் நம்பர் 225.47; 212.77 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 228.65; 221.24 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 237.12; 232.88 ரூபாயாக இருந்த 30ம் நம்பர், 248.76; 247.70 ரூபாயாக இருந்த 34ம் நம்பர், 263.58; 250.87 ரூபாயாக இருந்த 36ம் நம்பர், 266.75; 255.11 ரூபாயாக இருந்த 40ம் நம்பர், 270.98 ரூபாய்.
சூப்பர் கோம்டு (ஆர்.எல்., ரகம்): 219.12 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 235.00 ரூபாய்; 227.59 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 243.47; 239.23 ரூபாயாக இருந்த 30ம் நம்பர், 255.11; 254.05 ரூபாயாக இருந்த 34ம் நம்பர், 269.93 ரூபாய்; 261.46 ரூபாயாக இருந்த 40ம் நம்பர், 277.33 ரூபாய்; 311.20 ரூபாயாக இருந்த 50ம் நம்பர், 327.08 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வழக்கமாக கிலோவுக்கு ஐந்து ரூபாய் மட்டும் உயரும் நூலிழை விலை, தற்போது, 16 ரூபாய் உயர்ந்துள்ளது. இது, பின்னலாடை தொழில் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு

நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 264 ரூபாய் உயர்ந்து, 22,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,832 ரூபாய்க்கும், 1 சவரன், 22,656 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 30,290 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 33 ரூபாய் உயர்ந்து, 2,865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 264 ரூபாய் அதிகரித்து, 22,920 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 350 ரூபாய் உயர்ந்து, 30,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 63.30 ரூபாய்க்கும், 1 கிலோ பார் வெள்ளி, 59,140 ரூபாய்க்கும் விற்பனையானது

பயன்படுத்திய போனுக்கு புதிய போன்

பைபேக் என்று சொல்லப்படும், பயன்படுத்திய பழைய மொபைல் போன்களுக்கு, ஒரு விலை போட்டு எடுத்துக் கொண்டு தங்களின் புதிய மொபைல் போன்களைத் தரும் பழக்கத்தினை சோனி, நோக்கியா, சாம்சங் போன்ற அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும், தற்போது பின்பற்றி வருகின்றன. இந்த வகையில் எல்.ஜி. நிறுவனம், புதியதாக இத்திட்டத்தில் இறங்கியுள்ளது. எல்.ஜி. தன்னுடைய ஆப்டிமஸ் ஜி ப்ரோ (Optimus G Pro) மொபைல் போனை, சென்ற ஜூலை மாதம் இந்தியாவில் ரூ.42,500 விலையிட்டு விற்பனைக்கு 

அறிமுகப்படுத்தியது. தற்போது, வாடிக்கையாளர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொண்டு, இதனை விற்பனை செய்கிறது. பயன்படுத்திய ஸ்மார்ட் போனுக்கு ரூ.7,000 தருகிறது. இத்துடன், வட்டி இல்லாமல், மாதத் தவணையிலும் போன்களை விற்பனை செய்கின்றது. குறிப்பிட்ட வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கு, கடன் விண்ணப்பங்களுக்கான பரிசீலனைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறது. இந்தியாவில் இயங்கும் எல்.ஜி. விற்பனை மையங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. சாம்சங், தன் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் வாங்குவோருக்கு, இதே போன்ற திட்டம் ஒன்றை வழங்கி, பயன்படுத்திய போன்களுக்கு முதலில் ரூ.5,000 தள்ளுபடி விலையாக வழங்கியது. பின்னர் இதனை ரூ.7,000 ஆக உயர்த்தியது நினைவிருக்கலாம். எல்.ஜி. எந்த போன்களுக்கெல்லாம், இந்த தள்ளுபடி விலையினைத் தருகிறது என்ற தகவலைத் தரவில்லை. இந்நிறுவனத்தின் விற்பனை மையங்கள் அல்லது இணைய தளத்தில் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இந்த போனுக்கு எல்.ஜி. இரண்டு ஆண்டு வாரண்டி அளிக்கிறது. பெரும்பாலான மற்ற மொபைல் நிறுவனங்கள், ஓராண்டு மட்டுமே, வாரண்டி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை ரூ.400 உயர்ந்தது

தங்கம் விலை இன்று(செப்.,3ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,882-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.23,056-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.530 உயர்ந்து ரூ.30,820-க்கும் விற்பனையாகிறது.

‌வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.62.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.470 உயர்ந்து ரூ.58,040-க்கும் விற்பனையாகிறது.